காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் ரூ.20 லட்சம், 30 பவுன் நகை கொள்ளை


காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் ரூ.20 லட்சம், 30 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 17 Dec 2018 11:15 PM GMT (Updated: 17 Dec 2018 9:44 PM GMT)

காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.20 லட்சம், 30 பவுன்நகை ஆகியவற்றை 2 காரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது. சூதாடுபவர்களுக்கு பண உதவி செய்ய நிதி நிறுவன அதிபர்களும் அங்கேயே முகாமிட்டு இருப்பார்கள். இதனால் காங்கேயத்தை சுற்றி உள்ள தோட்டத்து பண்ணை வீடுகளில் சொகுசு கார்கள் வருவதும், போவதும் அந்த 3 நாட்களும் களை கட்டும்.

இந்த நிலையில் காங்கேயம் அருகே பாப்பினியில் உள்ள ஒரு தோட்டத்து பண்ணை வீட்டில் 14–ந் தேதி இரவு தொழில் அதிபர்கள் 10 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பண உதவி செய்ய 2 நிதி நிறுவன அதிபர்களும் அங்கே இருந்தனர். அப்போது சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், அந்த பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், சூதாட்டத்தில் ஜெயித்தவர்கள் மேலும் பணம் குவிய வேண்டும் என்றும் சூதாட்டத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். மேலும் அவர்கள் சூதாடிய பண்ணை வீட்டின் கதவை திறந்தே வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இரவு 1.30 மணிக்கு அந்த பண்ணை வீட்டின் முன்பு 2 சொகுசு கார்கள் திடீரென்று வந்து நின்றன. அந்த 2 கார்களிலும் இருந்து 12 பேர் ‘திபுதிபு’ வென்று கீழே இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்து இருந்தார். மற்றவர்கள் அரிவாள் வைத்து இருந்தனர்.

காரில் இருந்து இறங்கிய கும்பல் வீட்டிற்குள் புகுந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் ‘‘நான் யார் தெரியுமா? ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்’’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் சூதாடிக்கொண்டு இருந்த 10 பேரிடமும், நிதி நிறுவன அதிபர் 2 பேரிடமும் இருந்த செல்போன்களை மொத்தமாக வாங்கி அவற்றை சுவிட்ச் ஆப் செய்து வைத்துக்கொண்டது.

பின்னர் சூதாட வைத்து இருந்த ரூ.10 லட்சம், நிதி நிறுவன அதிபர் 2 பேரிடமும் இருந்த ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கும்பல் சுவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிருக்கு பயந்து வாயடைத்து போனார்கள். பின்னர் அந்த கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அணிந்து இருந்த நகையை கழற்றி கொடுக்குமாறு மிரட்டினார்கள். அப்போது அவர்கள் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சூதாடிக்கொண்டிருந்த 2 பேரை அரிவாளால் வெட்டியுள்ளது. இதனால் பயந்து போன அவர்கள், தாங்கள் அணிந்து இருந்த நகைகளை கழற்றி கொடுத்தனர். அதன்படி சூதாட்டக்காரர்கள் 10 பேர், நிதி நிறுவன அதிபர்கள் 2 பேர் என 12 பேரிடம் இருந்து 30 பவுன்நகைகளையும் அந்த கும்பல் பறித்தது.

அந்த கும்பல் பின்னர் சூதாட்டக்காரர்களை பண்ணை வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாக பூட்டி விட்டு காரில் தப்பி சென்று விட்டது. பின்னர் அந்த கும்பல் தாங்கள் கொண்டு சென்ற செல்போன்களில் 4–ஐ போகும் வழியில் செலாம்பாளையம் அருகே ஒரு நீதிபதி வீட்டின் முன்பு வீசி சென்றது. பின்னர் போகும் வழியெங்கும் ஒவ்வொரு செல்போனாக அந்த கும்பல் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் பண்ணை வீட்டிற்குள் அடைபட்டு கிடந்த சூதாட்டக்காரர்கள் கதவை உடைத்து அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டு எப்படி விழுந்தது என்று டாக்டரிடம் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் அந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் போலீசில் புகார் செய்ய வில்லை.

ஆனால் இது பற்றிய தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செலாம்பாளையம் பகுதியில் கிடந்த 4 செல்போன்களையும், மேலும் அந்த பகுதியில் ஆங்காங்கே கிடந்த செல்போன்களையும் கைப்பற்றி கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த செல்போன்கள் யாருடையது? என சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் எதுவும் வராததால், யார் மீது வழக்கு பதிவு செய்வது? யாரிடம் விசாரிப்பது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.20 லட்சம் மற்றும் 30 பவுன்நகை ஆகியவற்றை காரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரவியதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் பகுதி தோட்டத்து வீடுகளில் வாரம் தோறும் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தினக்கூலிகள் அல்ல. மிகப்பெரிய பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், நிதி நிறுவன அதிபர்கள், பண்ணையாளர்கள். இவர்கள் சூதாடுவதற்கு லட்சக் கணக்கில் பணம் கைமாறும். மேலும் லட்சக்கணக்கில் பணப்புழக்கம் இருப்பதால் போலீஸ் விசாரணை என வரும்போது, இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று போலீசில் தெரிவிக்க நேரிடும். உண்மை தெரிந்து விட்டால் வருமான வரி கட்டாமல் சட்ட விரோதமாக கருப்பு பணம் வைத்து இருந்ததாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும். இதனால் பயந்துபோய் பாதிக்கப்பட்ட தொழில் அதிபர்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க முன் வருவது இல்லை.இதன் காரணமாகவே அரிவாள் வெட்டுப்பட்ட 2 பேரையும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ரகசியமாக அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சிகிச்சை பெற்றதும் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் கொள்ளை கும்பலுக்கு கொண்டாட்டமாகி விடும். மேலும் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். எனவே கொள்ளை கும்பலின் அட்டகாசத்தை ஒடுக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன்வர வேண்டும்.

சூதாட்டத்தின் போது பணத்தை பறி கொடுத்தவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன் வராத நிலையில் அவர்கள் யார்? என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாது என பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களுடைய செல்போன் அனைத்தும் போலீசாரின் கையில் சிக்கி விட்டது. எனவே சூதாட்டத்தில் ஈடுபட்ட தொழில்அதிபர்கள், பண்ணையாளர்கள், நிதி நிறுவன அதிபர்கள் யார்? என்று செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

காங்கேயத்தை சுற்றி உள்ள பண்ணை வீடுகளில் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் உதவியுடன் சூதாட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தெரிந்தும் அவர்களுக்கு முறையாக அனைத்தும் சென்று விடுகிறது என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்கள். இதனால் சூதாட்டத்தை போலீசார் கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே காங்கேயம் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட தோட்டத்து வீட்டிற்கு சொகுசு கார்கள் அதிக எண்ணிக்கையில் வந்து சென்றால், அதற்கான காரணத்தை உடனே விசாரிக்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.


Next Story