அறக்கட்டளை அலுவலகத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய போலீசார்; நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் உடுமலை கவுசல்யா மனு


அறக்கட்டளை அலுவலகத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய போலீசார்; நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் உடுமலை கவுசல்யா மனு
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

அறக்கட்டளை அலுவலகத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் உடுமலை கவுசல்யா மனு கொடுத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருபவர் கவுசல்யா. இந்த நிலையில் அறக்கட்டளையில் அடைக்கலம் கேட்டு வந்த பெண் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கவுசல்யா வந்தார். அவருடன், உடுமலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் சகோதரர் யுவராஜும் வந்திருந்தார்.

பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரலிங்கம் பகுதியில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள மரக்காணம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்ஸ்ரீ என்பவர் தனது கணவரிடம் இருந்து விலகி சட்டப்படி விவாகரத்து பெற எங்கள் அறக்கட்டளையை அணுகினார். நாங்களும் முறைப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இதனால் எங்கள் சமூகநீதி அறக்கட்டளை கட்டிடத்தில் அவர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 13–ந்தேதி இரவு குமரலிங்கம் வந்த 2 போலீசார், அறக்கட்டளையில் இருந்த சந்தோஷ்ஸ்ரீயை எந்த தகவலும் தெரிவிக்காமல் அத்துமீறி உள்ளே நுழைந்து அடித்து உதைத்ததுடன், அவரை இழுத்து வெளியே கொண்டு சென்றனர். மேலும், அறக்கட்டளையை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரின் அண்ணன் முருகன் ஆகியோரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறி நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story