புதுச்சேரியில் பயங்கரம்: கழுத்து அறுக்கப்பட்டு புதுப்பெண் மர்ம சாவு, போலீஸ் விசாரணை


புதுச்சேரியில் பயங்கரம்: கழுத்து அறுக்கப்பட்டு புதுப்பெண் மர்ம சாவு, போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வங்கி ஊழியரான புதுப்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி குயவர்பாளையம் நல்லதண்ணீர் கிணறு பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு மகாலிங்கம் என்ற மகனும், அம்ச பிரபா(வயது 25) என்ற மகளும் உள்ளனர். பூபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகாலிங்கம் திருமணம் முடித்து முத்தியால்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அகிலாண்டேஸ்வரியும், மகள் அம்சபிரபாவும் குயவர்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அம்சபிரபா முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். புதுவையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அவர் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் ஒருவரை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்தின்பேரில் இவர்களது திருமணம் அடுத்த மாதம்(ஜனவரி) 27-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாமல் அம்சபிரபா வேலைக்கு செல்லாமல் நேற்று வீட்டில் இருந்தார். மதியம் 2 மணியளவில் திருமண விஷயமாக அகிலாண்டேஸ்வரி வெளியே சென்றார். மாலை 4 மணியளவில் அம்சபிரபா தனது தாயாருக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அவரும் உடனே வீட்டுக்கு வந்தார். கதவை தட்டிப்பார்த்தபோது திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்து கதவில் உள்ள ஓட்டை வழியாக பார்த்த போது அம்சபிரபா ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்சபிரபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அம்சபிரபா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், நியூட்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிக்கிடந்த வீட்டில் ரத்த வெள்ளத்தில் அம்சபிரபா கிடந்ததால் அவர் தனக்குத் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story