செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி கரூர் வருகை


செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி கரூர் வருகை
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 9:02 PM GMT)

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி கரூர் வருகிறார்.

கரூர்,

கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அ.ம.மு.க.வில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். பின்னர் கரூர் திரும்பிய அவர் இங்குள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி வருகிறார். செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) கரூர் ராயனூர் கலைவாணி நகர் பகுதியில் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிச்சாமி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்திருந்தார்.

அப்போது கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், செந்தில்பாலாஜியின் வரவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கும். அவர் கட்சி பணி ஆற்றுவதில் வல்லவர். தி.மு.க.வில் இணைபவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றார்.

Next Story