பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:25 AM IST (Updated: 24 Dec 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வசிப்பவர் ராம்குமார். இவர் கும்பகோணத்தில் 2 இடங்களில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராம்குமார் வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று விட்டார். பின்னர் நேற்று சேலத்திலிருந்து திரும்பி கும்பகோணம் வந்தார்.

ராம்குமார் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 30 பவுன் நகைகள், வைர நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராம்குமார் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் தடயவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி தடயவியல் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க தஞ்சையில் இருந்து மோப்ப நாய் டாபி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்துச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story