சசிகலா அறையில் வருமானவரித்துறை ஆவணங்கள்: குட்கா வழக்கில் சிக்கிய டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு தடை இல்லை, மீண்டும் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குட்கா வழக்கில் சிக்கிய தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு தடை இல்லை என்றும், இதுதொடர்பாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:–
கடந்த 2016–ம் ஆண்டு நடந்த குட்கா ஊழலில் அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு, வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்தனர். பின்னர் டி.கே.ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி. ஆக பணி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கிடையே குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கு விசாரணையின்போது, டி.கே.ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமானவரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகிவிட்டது என்று அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவ் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் குட்கா ஊழலில் டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்களும் சிக்கி உள்ளன. அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த தகவல் பரிமாற்றம், எந்தவித சம்பந்தமும் இல்லாத சசிகலாவின் அறைக்கு சென்றது எப்படி? டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும். இந்தக் குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்திடவும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சட்ட விதிகள் 2013–ன்படி புதிய டி.ஜி.பி.யை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “தமிழக டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 30–ந்தேதியுடன் நிறைவடைகிறது. முறைகேடாக அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு உடனடியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.
ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து, “இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் பதிலை பெறுவது அவசியம். அதற்கு முன்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது“ என்றனர்.
பின்னர், “ஏற்கனவே எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஆனால் வருமானவரித்துறை உள்ளிட்ட சில துறையினருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சென்றடைந்தது குறித்து உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே அந்த துறைகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கை வருகிற 21–ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.