குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றச்சாட்டு; தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும், மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு
குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றம்சாட்டி, தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
கடந்த மாதம் 26–ந் தேதி நல்லகண்ணு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எங்களது சமூகத்தை பற்றி தவறாக பேசியுள்ளார். இது எங்கள் சமூகத்தை சார்ந்த அனைவரது மனதையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே தரக்குறைவாக பேசிய தா.பாண்டியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
ஈரோடு நரிப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சிலர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:–
எங்களது பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டன. இதனால் அங்கு வேலை செய்த எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே தொழிலாளர்களின் நலன்கருதி மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் கட்சியினர் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கைகளில் கழிப்பறை கோப்பை, மின்விளக்கு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மின்விளக்கு, கழிப்பறை கோப்பையை பறிமுதல் செய்துவிட்டு மனு கொடுக்க அனுமதித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘தைப்பூச விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வார்கள். அவர்களுக்கு தேவையான குடிநீர், குளியல் அறை, கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குறிப்பாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கழிப்பிட வசதி, குளியல் அறை வசதியை தற்காலிகமாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேலு தலைமையில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனிவேல் என்பவர் மது பாட்டில்களை மாலையாக அணிந்து மனு கொடுக்க வந்தார். அவருடன், மாநில மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் கவுதம், மாநில நிர்வாகிகள் பழனிசாமி, பெருமாள் மற்றும் கட்சியினர் ‘‘24 மணிநேர மது விற்பனையை தடை செய்...’’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மது பாட்டில்களையும், பதாகைகளையும் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:–
ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், சென்னிமலை, பெருந்துறை ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட பிறகு இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை விதிமுறையை மீறி மது விற்பனை நடக்கிறது. கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்து வரும் அவர்கள் மீது டாஸ்மாக் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பார்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், அதற்கு உடந்தையாக இருக்கும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் பொன்னாண்டாவலசு அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
எங்கள் பகுதியில் கழிப்பிடம், மயானம், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. அனைத்து வசதிகளையும் உடனே அமைத்துக்கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 280 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களும், மொடக்குறிச்சி அருகே கரியகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமையலராக பணியாற்றி இறந்த கமலா என்பவரின் வாரிசுதாரரான நிர்மலாதேவிக்கு சமையலராக பணியாற்றுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. இதேபோல் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
இதில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.