இலவச பஸ்பாஸ் வழங்கக்கோரி காங்கேயம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


இலவச பஸ்பாஸ் வழங்கக்கோரி காங்கேயம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:30 AM IST (Updated: 8 Jan 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூர் அருகே காங்கேயம் அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள் இலவச பஸ் பாஸ் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே முள்ளிப்புரத்தில் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 800–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கல்லூரி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 2018–2019 கல்வி ஆண்டு தொடங்கிய கடந்த 7 மாதங்களாக அரசு கல்லூரியில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் கல்லூரிக்கு வந்துவிட்டு செல்லும் மாணவ–மாணவிகள் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்களில் தினந்தோறும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி சென்று வருவதாகவும், இதனால் தங்களுக்கு தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், எனவே தங்களுக்கு இலவச பஸ்பாஸ் உடனடியாக வழங்க கோரியும், மாணவ–மாணவிகள் நேற்று மதியம் 12.30 மணிக்கு பஸ் நிறுத்தத்தில் திடீரென்று நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்படி கல்லூரி மாணவ– மாணவிகள் தங்களது அடையாள அட்டையை காட்டி அரசு பஸ்களில் இலவசமாக வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ–மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக இந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story