“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:30 PM GMT (Updated: 13 Jan 2019 11:18 PM GMT)

“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” என்று ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர்-ஆசிரியைகள் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் கல்வியை மட்டும் கற்பிக்க கூடாது. தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் கிடைக்க கூடிய வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று மாணவர்கள் நினைக்காதீர்கள். சுயமாக தொழில் செய்து வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலை கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும்” என்றார்.

மேலும் மாவட்டத்தில் மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இனி செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஆசிரிய-ஆசிரியைகள் கேள்விகள் கேட்டனர். அதற்கான பதில்களை உடனுக்குடன் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அவரே விளக்கம் தந்துள்ளார். ஒருவேளை அவர் விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் அது பற்றி பேசலாம். ஆனால் இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியல் நெருங்கும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கும்.

காங்கிரசும், தி.மு.க.வும் மக்களால் வெறுக்கப்பட்ட கட்சிகள். காங்கிரசுடனான கூட்டணியை தி.மு.க.வின் தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. “கூடா நட்பு கேடு விளைவிக்கும்” என்று கருணாநிதி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் அந்த வாசகத்தை தி.மு.க. குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்வார்கள். இதுபற்றி கடம்பூர் ராஜு மற்றும் தம்பித்துரை கூறியதை ஏற்க முடியாது. இதே போல பா.ஜனதா யாருடன் கூட்டணி என்பது பற்றியும் தலைமை முடிவு செய்யும். நான் முடிவு செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story