தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது


தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 8:22 PM GMT)

தாய்–மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சித்தா டாக்டரான தமிழ்ச்செல்வியிடம் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 60) என்பவர் கழுத்தை நெரித்து 7 பவுன் நகையை கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவில் பறித்து சென்றார். அவர் கழுத்தை நெரித்ததால் மயங்கி விழுந்த தமிழ்ச்செல்வியை இறந்துவிட்டார் என்று கருதி அவர் சென்றுள்ளார்.

ஆனால் தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடப்பதை கண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த கொத்தனாரான ஆறுமுகம் (வயது 60) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். அவர் இதேபோல் வேறு ஏதேனும் சம்பவங்களில் ஈடுபட்டரா? என்பது குறித்து அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. முத்தியால்பேட்டை கணபதி நகரை சேர்ந்த அரசு ஊழியரின் மனைவியான கலைவாணியையும் அவர் கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதாவது கலைவாணியின் உறவினரான ஆறுமுகம் அடிக்கடி கலைவாணியிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

கடந்த 21–9–2015 அன்றும் அவர் கலைவாணியின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணம் தர கலைவாணி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அவரை கொலை செய்துவிட்டு சுமார் 40 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறுமுகம் கலைவாணியின் நெருங்கிய உறவினர் என்பதால் கலைவாணியின் இறுதி சடங்கு உள்ளிட்ட காரியங்களிலும் உடனிருந்துள்ளார். அதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் கடந்த 23–5–2017 அன்று ரெட்டியார்பாளையத்தில் வசிக்கும் கலைவாணியின் தாய் கிருஷ்ணவேணியிடமும் அவர் பணம் கேட்டுள்ளார். அவரும் தர மறுக்கவே அவரையும் கொலை செய்துவிட்டு 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். குதிரை பந்தயத்தில் ஆர்வம் உடைய அவர் அந்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் பணத்தை விட்டுள்ளார்.

மேலும் கொள்ளையடித்த நகைகளை புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (வயது 34) என்பவர் உதவியுடன் விற்று பணமாக்கியுள்ளனர். தனது உறவினர்களான தாய்–மகளை கொலை செய்து கொள்ளையடித்ததை ஆறுமுகம் ஒப்புக்கொண்டு போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நகைகளை விற்க உதவி செய்த சதீசையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 22 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.

2 கொலைகள் செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆறுமுகத்தை கைது செய்த போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், இனியன் மற்றும் போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா பாராட்டினார்.


Next Story