ரூ.1,937 கோடி செலவில் சேலம்-செங்கப்பள்ளி வரை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ரூ.1,937 கோடி செலவில் சேலம்-செங்கப்பள்ளி வரை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 5:46 AM IST (Updated: 17 Jan 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

‘ரூ.1,937 கோடி செலவில் சேலம்-செங்கப்பள்ளி வரை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்’ என்று மகுடஞ்சாவடியில் நடந்த அரசு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் ரூ.90 கோடியில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகுடஞ்சாவடியில் நேற்று நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் முதன்முதலில் 1989-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது மகுடஞ்சாவடி ஒன்றியம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அந்த காலகட்டத்தில், மகுடஞ்சாவடியில் இருக்கின்ற வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததன் காரணத்தினால், அன்றைக்கு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆகவே, இந்த மண்ணை எப்போதும் மறக்காமல், இந்த மண்ணிலே நிலைத்து நிற்கின்ற அளவிற்கு எனக்கு மிகப் பெரிய இடத்தை அளித்த ஒன்றியம் மகுடஞ்சாவடி ஒன்றியம். அன்றைக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம், இன்றைக்கு தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருக்கின்றேன்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடியிலும், அரியானூரிலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்ற பகுதியாக இருக்கிறது. இதனால் இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு இடங்களிலும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.

இன்றையதினம், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்திப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா இருந்த காலத்திலும் சரி கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து குறைகள் நீக்கப்பட்ட அரசு இந்த அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எம்.எல்.ஏ.ஆக இருக் கிறபோது மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எல்லா கிராமங்களுக்கும் சென்றிருக்கிறேன். சேலம் மாவட்டத்திலுள்ள அத்தனை கிராமங்களுக்கும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் போய் சேரவேண்டும் என்று அறிவித்ததால், எல்லா பகுதிகளுக்கும் நானே நேரடியாகச் சென்று அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

நாங்கள் ஏற்கனவே கிராமம், கிராமமாகச் சென்று அந்த கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து, அதை உடனுக்குடன் நிறைவேற்றி இருக்கின்றோம். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், அதையே தொடர்ந்து இன்றைக்கு செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அனைத்து மக்களுடைய அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகின்ற அரசு இது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினர் கிராமம், கிராமமாக போனாலும் சரி, நடைபயணம் மேற்கொண்டாலும் சரி. அ.தி. மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தந்திருக்கின்றது.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். கிராமப்புற, நகர்ப்புற மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு உள்ளாட்சி அமைச்சரிடத்தில் இருந்தது. அப்போது, எத்தனை கிராமங் களுக்கு நீங்கள் சென்றீர்கள், எத்தனை மக்களை பார்த்தீர்கள், எத்தனை மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?. ஏனென்றால் தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை.

மு.க.ஸ்டாலினின் ஊராட்சி சபை கூட்டம் என்பதெல்லாம் போலி விளம்பரம். இவர் ஆட்சியில், பதவியில் இருந்தபொழுது, எனக்குத் தெரிந்த அளவில் இவர் கிராமங்களுக்கு சென்றதுபோல் தெரியவில்லை. மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் எத்தனை கிராமங்களுக்கு வந்திருக்கிறார்? ஆளுங்கட்சியாக இருக்கும் போது மக்களை பார்க்கவில்லை.

இப்பொழுது தி.மு.க. எதிர்க்கட்சியாகி 3 ஆண்டுகள் ஆகிறது. எங்கு போய் மக்களை பார்த்தீர்கள்?. இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, இவர்கள் ஊராட்சி சபை கூட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை எந்த அரசியல் தலைவராலும் ஏமாற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கியதற்கு காரணமே கிராமத்திலே இருந்து நகரம் வரை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சேரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கின்றோம். இருபெரும் தலைவர்கள் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

சேலம்-கோவை 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படும். ஏனெனில் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்றது. இதனால் சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையை (103 கிலோ மீட்டர்) 8 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும். இதற்காக, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்க இருக்கின்றது. இந்த விரிவாக்கத்திற்காக ரூ.1,937 கோடி மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டம் விரைவாக தொடங்கப்படும். தமிழகத்தில் சாலை சீரமைப்பு பணிகள் சிறப்பாக இருக்கின்றது என அத்தனை மக்களும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும், உங்களுடைய மகத்தான ஒத்துழைப்போடு தவிடுபொடியாக்கப்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா, மாவட்ட கலெக்டர் ரோகிணி, எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ராஜா, வெங்கடாஜலம், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, மருதமுத்து, சின்னதம்பி, தமிழ்நாடு முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், இடங்கணசாலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம், அ.தி.மு.க.பேரூராட்சி செயலாளர் அண்ணாமலை, துணை செயலாளர் முத்து, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஏழுமலை, எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி செயலாளர் வேடியப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பல்வேறு துறைகள் மூலம் 3,816 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story