அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2019 4:15 AM IST (Updated: 22 Jan 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு கிராமம் பெரியார் நகர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காரப்பட்டு, கதவணி, கீழ்மத்தூர், கருமாண்டபதி, உப்பாரப்பட்டி, நல்லாகவுண்டனூர், குன்னத்தூர், பாப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, வண்ணாம்பள்ளி, ஜெ.புதூர், எளச்சூர், காமாட்சிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாணவ, மாணவிகள் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இதே போல் இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வங்கி, அரசு துணை மருத்துவமனை, மின்சார வாரிய அலுவலகம், கால்நடை மருந்தகம் போன்றவற்றிற்கும் காரப்பட்டு கிராமத்திற்கு சென்று வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளும் காரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு செல்கின்றனர்.

இப்படி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காரப்பட்டு பெரியார் நகர் பகுதியில் அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு வந்து குடிப்பவர்களால் தினமும் விபத்து ஏற்படுவதும், இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாக செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கடையை அகற்றிட வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, உடனடியாக இந்த மதுக்கடையை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story