காந்தி நினைவு நாள்: தமிழகம் முழுவதும் இன்று மது விற்பனைக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


காந்தி நினைவு நாள்: தமிழகம் முழுவதும் இன்று மது விற்பனைக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:45 AM IST (Updated: 30 Jan 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

காந்தி நினைவு தினத்தையொட்டி இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதித்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த ரதீஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

குமரி மாவட்டம், புதுக்கடையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் அருகில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கோவில் ஆகியவை அமைந்துள்ளன. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பெண்கள், மாணவ–மாணவிகள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று குமரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக புதுக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது குறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த செய்தியின் அடிப்படையில் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவில், மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். மேலும் மகாத்மா காந்தி நினைவு நாளான 30–ந் தேதி (அதாவது இன்று) மது விலக்கு நாளாக அறிவித்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள், ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்களிலும் அன்றைய தினம் மது விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிக்கையை 31–ந் தேதி (நாளை) அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story