பிரதமர் மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 377 பேர் கைது
திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 377 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காலணியை தூக்கி வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
இதற்காக நேற்று காலை முதலே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு காவிக்கொடியுடன் இந்து முன்னணியினர் திரண்டனர். இதற்கிடையில் ம.தி.மு.க.வினர் திடீரென்று தங்களது கருப்புக் கொடி போராட்டத்தை திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள திருப்பூர் குமரன்சிலை முன்பு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் கட்சி கொடியுடன் ம.தி.மு.க.வினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு கூடினார்கள். இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ம.தி.மு.க.வினர் போராட்டம் நடத்த இருந்த பகுதியை சுற்றி இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சிவபாலன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருப்பூருக்கு வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன், ‘தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடியே திரும்பி போ’ என்றும், மத்திய அரசுக்கு தொடர்ந்து துணை போகும் மாநில அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:-
பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து வருகிறார். மத்திய அரசு நாசகர திட்டங்களை அறிவித்து அதை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 5,500 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலமாக்கும் திட்டத்திற்கும் எடப்பாடி அரசு கையெழுத்திட்டுள்ளது.
அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநிலங்கள் சிதறும். மேகதாது அணை விஷயத்திலும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு கடும் துரோகம் விளைத்து விட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதும் திட்டமிட்டு அங்குள்ளவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியுள்ளனர். கஜாபுயலால் பாதிக்கப்பட்டபோது பார்க்க வராத மோடி, தற்போது எப்படி இங்கு வருகிறார் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் நீண்ட நேரமாக நடைபெற்றது. அப்போது போலீசார் ம.தி.மு.க. நிர்வாகிகளிடம், போராட்டத்தை முடிக்கும்படி கூறினர். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த வைகோ திட்டமிட்ட படி போராட்டத்தை நடத்தி விட்டு தான் இங்கிருந்து புறப்பட்டு செல்வேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸ் கமிஷனர் மனோகரன் வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ம.தி.மு.க. தொண்டர்களின் ஒருபகுதியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். இதற்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின்னர் கைது நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர். இதற்கிடையில் போராட்டம் தொடங்கியபோது பேச தொடங்கிய வைகோ, மதியம் 2.30 மணிவரை பேசினார். பின்னர் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அதன்பின்னர் வைகோ உள்பட 377 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அண்ணாசிலை, பெரியார் சிலை, குமரன் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
போராட்டத்தின் போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென ‘மோடி வாழ்க என்றும், பாரத் மாதாகீ ஜே’ என்றும் கோஷங்கள் எழுப்பியபடி தனது காலில் கிடந்த காலணியை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத போராட்டக்காரர்கள் அந்த இளம்பெண்ணை தாக்க முயன்றனர்.
உடனே போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அருகில் இருந்த கடைக்குள் அழைத்துச்சென்று பாதுகாப்பாக இருக்க வைத்தனர். பின்னர் அந்த பெண்ணை போலீசார், அங்கிருந்து வெளியேற்றி போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியான சசிகலா என்பது தெரியவந்தது. இதற்கிடையில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்து ம.தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்ததும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story