நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்து கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக் கோரி வழக்கு; அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் போக்குவரத்துக்கழகம் சார்பில் தரமான உணவகங்கள் ஏற்படுத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் அரசு விரைவு பஸ்களில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் புத்துணர்ச்சி பெற தமிழகத்தில் 31 உணவகங்களை அரசு போக்குவரத்துக்கழகம் அங்கீகரித்துள்ளது. இங்கு டிரைவர், கண்டக்டர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு உணவு, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட உணவகத்துக்கு பயணிகளை அழைத்துவர அவர்களுக்கு பணமும் கொடுக்கின்றனர். ஆனால் இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், மற்ற இடங்களை காட்டிலும் பல மடங்கு கூடுதல் விலைக்கும் விற்கிறார்கள். ரசீதும் கொடுக்கப்படுவது இல்லை. ஆனால் தனியார் பஸ்கள் அனைத்தும் தரமான உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அதேபோல் இந்திய ரெயில்வேயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது.
ரெயில் நிலையங்களில் உள்ளதைப் போல நிரந்தர விலையில் தரமான உணவு, ஆவின் பாலகம், தொலைபேசி இணைப்பு, முதலுதவி மையம், சி.சி.டி.வி கேமரா, சுத்தமான கழிப்பறை வசதிளுடன் நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் அமைத்து, அங்கு அனைத்து அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தவும், அரசு பஸ்களில் நெடுந்தூர பயணம் செய்யும் பயணிகளுக்கு காலை 7.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் உணவுகள் வழங்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் தூரத்திலும் அரசு போக்குவரத்துக்கழகம் சொந்தமாக உணவகங்களை அமைத்து செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து தமிழக போக்குவரத்துக்கழக கூடுதல் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.