அ.தி.மு.க.வுடன் கூட்டணி பா.ம.க. மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு


அ.தி.மு.க.வுடன் கூட்டணி பா.ம.க. மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பா.ம.க.வை மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.சி.வில்வநாதன், சுரேஷ்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

தேர்தல் பணி குறித்து தி.மு.க. செயல்வீரர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகிறது. கருத்துக் கணிப்புகளை பார்த்து ஏமாறுகிற கட்சி தி.மு.க. அல்ல. கருத்துக் கணிப்புகள் சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தாலும் அதனை ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதில் 95 சதவீத ஊராட்சிகளில் முடிவடைந்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது முடிவடைந்து விடும்.

தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் கிராமசபை கூட்டம் குறித்தும், தன்னை காப்பி அடிப்பதாகவும் கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது பெரும்பாலான கிராமங்களுக்கு சென்று கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளேன். இதுவெல்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஆட்சியில் இருக்கும்போது கிராமங்கள் தெரியவில்லையா? என கேட்கிறார். நான் அவருக்கு ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன். தமிழகத்தில் எந்த ஊராட்சியில் வேண்டுமானாலும் சின்ன, சின்ன கிராமத்தில் கூட நான் தன்னந்தனியாக சென்று நிற்கிறேன். அங்கு பொதுமக்கள் என்னை தலைவர் கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் என்று சொல்வார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி தனியாக செல்ல முடியுமா?, அதுவும் வேண்டாம் சேலம் மாவட்டத்திலோ அல்லது அவரது தொகுதியான எடப்பாடியிலோ கூட நிற்கமுடியுமா? இதனை அவருக்கு சவாலாக கூறுகிறேன்.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. ஆட்சியை மிரட்டி பா.ஜ.க.வினர் கூட்டணி அமைக்கின்றனர். தமிழகத்தில் கால் ஊன்ற போவதாக கூறுகின்றனர். காலே இல்லாமல் எப்படி கால் ஊன்ற முடியும். பா.ஜ.க.வினருக்கு அடிப்படை கருத்துகள், கொள்கைகள் கிடையாது. குட்கா ஊழல் வழக்கு, முதல்-அமைச்சர் மீது கோடநாடு கொலை வழக்கு, அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதுபோன்ற காரணங்களை கூறி, மிரட்டி, அச்சுறுத்தி கூட்டணி ஏற்படுத்தி உள்ளனர்.

தற்போது அ.தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பா.ம.க. ஏற்கனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 7 தொகுதிகளில் போட்டியிட்டு, 9 தொகுதிகளில் தோற்றவர்கள். ராஜ்யசபா என்பது 2 எம்.பி. தொகுதிகளுக்கு சமம். மீண்டும் அதேபோன்று 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கின்றது என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பார்க்கலாம்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிராமதாஸ் ஆகியோர் அ.தி.மு.க. ஊழல் கட்சி என கூறி வந்தனர். டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வின் கதை என்ற புத்தகத்தை தயார் செய்து அதில் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வரை ஊழல் குறித்தும், சொத்து விவரங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளனர். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாசுக்கு வெட்கம், சூடு இல்லையா? அப்படிப்பட்ட பதவி தேவையா? அவர்களுக்கு மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் கவலை கிடையாது. பணம் மட்டுமே முக்கியம் ஆகும்.

மக்களின் பிரச்சினைக்களுக்காக அமையும் கூட்டணி நமது கூட்டணி ஆகும். ஆம்பூர் தொகுதியில் 242 பூத்கள் உள்ளது. ஒரு பூத்துக்கு 20 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் 20 ஓட்டுகள் பெற முயற்சித்தால் போதும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், முன்னாள் எம்.பி. முகமதுசகி, வக்கீல்கள் ரமேஷ்பாபு, ஜோதிராமன், ஆசிரியர் குணசேகரன், கந்திலி ஒன்றியம் ஏ.பி.பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story