திருப்பூர் கோவில் திருவிழாவில் தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


திருப்பூர் கோவில் திருவிழாவில் தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2019 5:00 AM IST (Updated: 2 March 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் காந்திநகரில் கோவில் திருவிழாவின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகரை அடுத்த பத்மாவதிபுரத்தில் மாகாளி அம்மன் கோவில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் வெளிநபர்களை அழைத்து வந்து அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், மனோகரன் ஆகியோரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ் (வயது26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி பத்மாவதிபுரம் ஊர் பொதுமக்கள் கடந்த 26–ந்தேதி முதல் தினமும் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அவினாசி ரோடு காந்திநகர் சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் அவர்களிடம் சாலைமறியலை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பொதுமக்கள் 4 சாலைகளின் சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் நடந்தது காலை நேரம் என்பதால் அவினாசி–திருப்பூர் ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர போலீஸ் வடக்கு உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன் பொதுமக்களிடம் சாலை மறியலை கைவிடுமாறும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கோவில் வளாகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறும் கூறினார். இதன் பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன் ஊர் பொதுமக்களிடம் கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் பொதுமக்கள் எழுப்பினார்கள்.

அவர்களிடம் போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு 1 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் சம்மதம் தெரிவித்ததால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பான சூழ்நிலையும் நிலவியது.


Next Story