விருத்தாசலம், வடலூரில் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


விருத்தாசலம், வடலூரில் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 March 2019 4:00 AM IST (Updated: 24 March 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம், வடலூரில் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூபநாராயணநல்லூர் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி இந்திராதேவி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். அதில் ரூ.59 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பரமசிவம்(வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் விருத்தாசலத்தில் அகல் விளக்கு வாங்குவதற்காக சென்னையில் இருந்து ரூ.59 ஆயிரம் எடுத்து வந்ததும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தாசில்தார் கவியரசுவிடம் ஒப்படைத்தனர். அப்போது துணை தாசில்தார்கள் அன்புராஜ், முருகன், வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்(35) என்பதும், உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை விருத்தாசலம் தாசில்தார் கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவா தலைமையிலான குழுவினர் வடலூரில் உள்ள பண்ருட்டி–கும்பகோணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டிவந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(24) என்பதும், உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதேபோல் விருத்தாசலம்–கடலூர் சாலையில் அரசு போக்குவரத்துக்கழகம் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த பாபு என்பவரை சோதனை செய்தபோது அவர் உரிய ஆவணமின்றி ரூ.60 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் திருக்கோவிலூரை சேர்ந்த ரகுமான்(47) என்பவர் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரம், வடலூரை சேர்ந்த ரங்கமன்னன்(52) என்பவர் காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 69 ஆயிரத்தை நிலை கண்காணிப்பு அலுவலர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியில் கடலூரில் இருந்து கொச்சின் நோக்கி சென்ற லாரியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.53 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story