தேவையற்ற இணைய முகவரிகளை தடை செய்யும் மென்பொருள் குறித்த வழக்கு: பதில் அளிக்காத தொலை தொடர்பு துறை செயலாளர் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தேவையற்ற இணைய முகவரிகளை தடை செய்யும் மென்பொருள் குறித்த வழக்கு: பதில் அளிக்காத தொலை தொடர்பு துறை செயலாளர் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தேவையற்ற இணையதள முகவரிகளை தடை செய்யும் மென்பொருள் குறித்த வழக்கில் பதில் அளிக்காத மத்திய தொலை தொடர்பு துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

செல்போன் பயன்பாட்டின் காரணமாக தற்போது ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையதளத்தை உபயோகிக்கிறார்கள். அரசின் பணிகள் உள்பட அனைத்தும் இணையதளத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் இணையதளத்தால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல் (நீல திமிங்கலம்), வெப் புல்லிங் போன்ற விளையாட்டுகளால் உயிரிழப்பு ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத்துள்ளன.

இவை பள்ளி குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. இணையதளத்தில் தேவையில்லாத முகவரிக்குள் சென்று விபரீதத்தால் பாதிக்கப்படுவதில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் தங்களது செல்போன், கணினி, மடிக்கணினிகளில், ‘பாரண்டல் விண்டோ‘ என்ற மென்பொருளை பயன்படுத்தி, தேவையற்ற முகவரிகளை தடை செய்யலாம்.

இந்த மென்பொருள் இருப்பது பற்றியும், அதை பயன்படுத்துவது குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இணையதள சேவை வழங்கும் உரிமையாளர் சங்கத்தின் கடமை. இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி கடந்த 2017–ம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில் அந்த மென்பொருள் பற்றி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர், இணையதள சேவை வழங்கும் உரிமையாளர் சங்க செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர்கள் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ‘‘இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. எனவே மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர், இணையதள சேவை வழங்குவோர் சங்க செயலாளர் ஆகியோர் வருகிற 8–ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story