காங்கேயத்தில் பரபரப்பு; தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமானவரி சோதனை பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? தீவிர விசாரணை


காங்கேயத்தில் பரபரப்பு; தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமானவரி சோதனை பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? தீவிர விசாரணை
x
தினத்தந்தி 6 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-07T02:51:02+05:30)

காங்கேயத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருப்பவர் பி.பி.அப்புக்குட்டி(வயது 60). இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் உலர் களம், பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவருக்கு காங்கேயம்-முத்தூர் ரோடு மிதிப்பாறையில் சொந்தமாக வீடு உள்ளது. இவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று பி.பி.அப்புக்குட்டி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் குண்டடம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்று இருந்தார். அப்போது நேற்று மதியம் 12 மணியளவில் கோவையில் இருந்து ஒரு காரில் வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் மிதிப்பாறைக்கு வந்தனர். காரை விட்டு இறங்கிய அவர்கள், தி.மு.க. பிரமுகர் பி.பி.அப்புக்குட்டி வீடு பூட்டி கிடப்பதை பார்த்து உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்தனர்.

பின்னர் அவர் வீட்டுக்கு வந்தவுடன் உள்ளே வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்புறம் வீட்டு கதவை பூட்டினார்கள். அதன்பிறகு வீட்டில் எங்காவது பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என வருமானவரித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு இடமாக தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பின்னர் வீட்டில் இருந்த பீரோக்களில் ஆவணங்கள் எதுவும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என தேடினார்கள்.

அதன்பிறகு பி.பி.அப்புக்குட்டியிடம் வருமானவரி செலுத்தியதற்கான ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை வாங்கி சரிபார்த்தனர். வங்கி கணக்கில் கூடுதலாக பணம் ஏதேனும் வரவு வைக்கப்பட்டு இருக்கிறதா? வங்கி கணக்கில் இருந்து கூடுதலாக பணம் பரிமாறப்பட்டு உள்ளதா? என ஆய்வு நடத்தினார்கள்.

அதன்பிறகு அவரை அழைத்து கொண்டு காங்கேயம் டவுன் தாராபுரம் ரோட்டில் களிமேடு என்ற இடத்தில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இது குறித்து தி.மு.க. பிரமுகர் பி.பி.அப்புக்குட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன். அவருக்கு நெருங்கிய நண்பர் என்பதாலும், நான் தி.மு.க. பிரமுகர் என்பதாலும் வருமானவரித்துறையினர் எனது வீடு, கட்சி அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். நான் முறையாக தொழில் செய்து வருகிறேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிஇனங்களை முறையாக செலுத்தி வருகிறேன். எனது வீட்டில் நான் அரசுக்கு செலுத்திய வரி இனங்களுக்கான ஆவணங்களை காண்பித்தேன். எனது வங்கி கணக்குகளையும் சரிபார்த்தனர். வாக்காளர்களுக்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் என்ற கருதி வந்தனர். என்னிடம் அவ்வளவு பணம் எதுவும் கிடையாது. முறையாக தொழில் செய்து சம்பாதித்த பணம் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. பிரமுகரின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் நேற்று காங்கேயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story