சிறுவர்களின் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு: ‘டிக்-டாக்’ செயலிக்கான தடை நிபந்தனையுடன் நீக்கம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சிறுவர்களின் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு: ‘டிக்-டாக்’ செயலிக்கான தடை நிபந்தனையுடன் நீக்கம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 8:51 PM GMT)

‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரை,

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அடுத்தவர்களை போல நடித்து, கேலி செய்தும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்குவது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டு முடிவு எடுக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி ‘டிக்-டாக்’ செயலி மிகவும் விபரீதமானது என வாதாடினர்.

அப்போது ‘டிக்-டாக்’ நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “டிக்-டாக் செயலிக்கு கோர்ட்டு தடை விதித்த பின்பு, 60 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் தவறான நோக்கத்திலும், ஆபாசமாகவும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டால், 15 நிமிடங்களில் அகற்றப்படும். இந்திய அரசின் கருத்துரிமை விதிகளுக்கு உட்பட்டுதான் எங்கள் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பதால் சுமார் 250 நேரடி பணியாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் ஊழியர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று வாதாடினார்கள்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்தியாவில் சிறுவர், சிறுமியர்களை பாதுகாக்க உரிய சட்டங்கள் இல்லை” என்றனர்.

பின்னர், மத்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்ட முன் வரைவு கடந்த 2017-ம் ஆண்டு நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. தற்போது அந்த சட்ட முன்வரைவானது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறுவதற்கு வைக்கப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அப்போது டிக்-டாக் நிறுவன தரப்பு வக்கீல்கள், “பேஸ்புக், வாட்ஸ்-அப் செயலிகளை விட, டிக்-டாக் செயலியில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால் அந்த செயலி மூலமாக வீடியோவை நீக்கம் செய்யும் வசதி உள்ளது. இந்த செயலி குறித்து இந்தியாவில் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தற்போது இந்தியாவில் இருந்து புகார் செய்ய தனி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த செயலிக்கு தடை விதிக்கக்கூடாது“ என்று வாதாடினார்கள்.

இதையடுத்து நீதிபதிகள், ‘டிக்-டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் சிறுவர், சிறுமிகள், பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யமாட்டோம் என உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றனர்.

இதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்த நிறுவனம் தரப்பில் உரிய உறுதிமொழி வழங்கப்பட்டது. அந்த உறுதிமொழியில், பெண்கள், சிறுமிகள், சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை செயலியே அகற்றும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தவறி, மேற்கண்ட வகை வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால், ஊழியர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் 13 வயதுக்குகீழ் உள்ளவர்கள் மைனர் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்தியாவில் 18 வயது வரை மைனர் என கருதப்படுகிறார்கள். இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் நடித்து, அந்த வீடியோவை டிக்-டாக் செயலியில் பதிவேற்றம் செய்ய முடியாது. இதுதொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிப்பதற்கு என மண்டல அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதி பதிகள், ‘டிக்-டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

மேலும், சிறுவர், சிறுமியர் பங்கேற்ற வீடியோக்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்படாது என்று டிக்-டாக் நிறுவனம் அளித்த உறுதிமொழி மீறப்படும்பட்சத்தில், கோர்ட்டு தானாக முன்வந்து அவ மதிப்பு வழக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் எச்சரித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story