அங்கீகாரம் பெறாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அங்கீகாரம் பெறாத பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பள்ளிவிளையைச் சேர்ந்த சதீஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
குமரி மாவட்டம் சங்குருட்டியில் ஏஞ்சல் குளோபல் பள்ளி (ஐ.சி.எஸ்.இ.) மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக குழித்துறை பகுதிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐ.சி.எஸ்.இ. பள்ளியில் 6–ம் வகுப்பு தொடங்கிய பிறகு மாநில அரசின் தடையின்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பள்ளிக்கு அங்கீகாரம் பெறப்படவில்லை. அவ்வாறு அங்கீகாரம் பெறாத நிலையில் ஐ.சி.எஸ்.இ. பள்ளி என விளம்பரம் செய்து, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் ஒன்று முதல் 5–ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்கக்கூடாது. அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் சேர்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கீகாரம் பெறாத பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி, “இந்த பள்ளியின் தாளாளர் ஏற்கனவே நம்பாளியில் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிக்கூடம் நடத்தினார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உத்தரவுபடி அந்த பள்ளி மூடப்பட்டது. அங்கு படித்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். தற்போது புதிய பெயரில் பள்ளி தொடங்கி மாணவர்களை சேர்த்து வருகின்றனர்” என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், அங்கீகாரம் பெறாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.