சேர்ந்து வாழ மறுத்த பெண் கொலை: முன்னாள் கவுன்சிலருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது


சேர்ந்து வாழ மறுத்த பெண் கொலை: முன்னாள் கவுன்சிலருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 10:27 PM GMT)

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கொன்ற முன்னாள் கவுன்சிலருக்கு தஞ்சை கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் இந்திரஜித். முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த காசிநாதனின் மனைவி சங்கீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சங்கீதாவை தன்னுடன் சேர்ந்து வாழ இந்திரஜித் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இந்திரஜித், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2015–ம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சங்கீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த சங்கீதா, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்திரஜித்தை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் 2–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story