செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை உறவினர்கள் கைவரிசையா? என போலீஸ் விசாரணை
செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை உறவினர்கள் கொள்ளையடித்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்,
செங்கத்தை அடுத்த இலங்குன்னி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 75), ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேடியப்பன் வழக்கம் போல் வீட்டின் கதவை பூட்டிவிட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மேல்செங்கம் போலீசில் வேடியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய போது, வீட்டின் கதவு மற்றும் பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை என தெரியவந்தது.
இதனையடுத்து வேடியப்பனிடம் விசாரணை நடத்தியதில், பீரோ சாவி வழக்கம் போல் வீட்டில் வைத்துவிட்டு தூக்கியதாகவும், தனியாக வசித்து வருவதாகவும் கூறினார்.
வேடியப்பனை அவரது உறவினர்கள் அல்லது அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தவர்கள் அவர் வீட்டில் உறங்கிய பின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா? என போலீசார் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.