திருமங்கலம் அருகே மீண்டும் பரபரப்பு: தண்டவாளத்தில் வைத்த காங்கிரீட் கல் மீது முத்துநகர் எக்ஸ்பிரஸ் மோதியது ரெயிலை கவிழ்க்க சதியா? தீவிர விசாரணை
மதுரை திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் வைத்த காங்கிரீட் கல் மீது முத்துநகர் ரெயில் மோதியது. ரெயிலை கவிழ்க்க சதி செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுரை,
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் விருதுநகரை கடந்து கள்ளிக்குடிக்கும், சிவரகோட்டைக்கும் இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஓரிடத்தில் தண்டவாளத்தின் குறுக்கே ஒரு பொருள் கிடப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்து கொண்டு உடனடியாக ரெயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கினார். ஆனாலும், ரெயில் என்ஜினின் முன்பகுதி அந்த பொருள் மீது மோதியது. அப்போது பலத்த சத்தமும் கேட்டது. இருந்தாலும் ரெயில் அங்கே நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது.
தண்டவாளத்தில் கிடந்த பொருள் மீது என்ஜின் மோதியது குறித்து முத்துநகர் ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக மதுரையில் உள்ள ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் மதுரை வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, என்ஜின் டிரைவர் சென்று நடந்த சம்பவம் குறித்து விவரித்தார். இதைதொடர்ந்து ரெயில் என்ஜினின் முன்பகுதியிலும், சக்கரங்களிலும் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்று ரெயில்வே அதிகாரிகளும், பொறியாளர்களும் சோதனை செய்தனர். அதன்பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் கிடந்தது என்ன? என்பதை கண்டறிய மதுரையில் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விருதுநகர் ரெயில்வே போலீசார் சென்று பார்த்தபோது, நில அளவீடாக ஊன்றப்படும் சிமெண்டு காங்கிரீட் கல் ஒன்று, ரெயில் மோதியதில் சற்று உடைந்த நிலையில் கிடந்தது. பின்னர் மதுரையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிவரகோட்டை வரை மோப்பநாய் ஓடி நின்றது.
மேலும், தண்டவாளத்தின் அருகே காலி மதுபாட்டில், தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்தன. இதனால் சிலர் மது போதையில் விஷமத்தனமாக சிமெண்டு காங்கிரீட் கல்லை தண்டவாளத்தில் வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் ரெயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்தில் கள்ளிக்குடி–திருமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரே தண்டவாளத்தில், எதிர் எதிரே 2 ரெயில்கள் இயக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க நடத்த சதியானது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.