வழக்கு பதியாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர், தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 8–ந் தேதி இவர், மடிப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
ஆதம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாதேவி தலைமையிலான போலீசார் ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணனை நிறுத்தி விசாரித்தனர்.
கண்ணனிடம், மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் எதுவும் இல்லாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வைத்தனர்.
இதையடுத்து கண்ணன், மறுநாள் உரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டியதால் அவரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் பூமாதேவி, கண்ணனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன், இதுபற்றி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கொண்ட தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் பூமாதேவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு, ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுத்து அதை லஞ்சமாக பெண் இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்துடன் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்ற கண்ணன், அந்த பணத்தை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பூமாதேவியிடம் கொடுத்தார். அதை இன்ஸ்பெக்டர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று இன்ஸ்பெக்டர் பூமாதேவியை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக பெண் இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.