நியமனங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு: லோக் ஆயுக்தா தலைவர்–உறுப்பினர்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நியமனங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு: லோக் ஆயுக்தா தலைவர்–உறுப்பினர்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:45 AM IST (Updated: 11 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர் நியமன அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்களை நியமித்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும். இந்த குழுவில் முதல்–அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகிய 3 பேர் இடம் பெற்று இருப்பார்கள். உறுப்பினர்களை தேர்வு செய்யும்போது, தேர்வுக்குழுவினர் அனைவரும் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறவில்லை. அவர் இல்லாமலேயே லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து, அதுகுறித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது செல்லாது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story