செல்போன் திருடிய வாலிபர் கைது பெண்களின் எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியபோது சிக்கினார்


செல்போன் திருடிய வாலிபர் கைது பெண்களின் எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியபோது சிக்கினார்
x
தினத்தந்தி 11 Jun 2019 9:45 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

செல்போன் திருடிய வாலிபர் அதில் உள்ள பெண்களின் எண்களை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியபோது சிக்கினார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருங்கோழி, யாதவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் உதயராஜ் (வயது 26). கடந்த 6–ந்தேதி இவரது விலை உயர்ந்த செல்போன் திருட்டு போனது. இது குறித்து உதயராஜ் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் உதயராஜின் செல்போண் எணணில் இருந்து பெண்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. அவர்கள் எடுத்தபோது மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து அவர்கள் உதயராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து உத்திரமேரூர் சிறப்பு போலீசார் விசாரித்ததில் உத்திரமேரூர் அடுத்துள்ள காவானுர் புதுச்சேரி, காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்த வினோத் (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் வினோத் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார் அப்போது அங்கு பணியாற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து தொழில்சாலை நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதும் தெரியவந்தது.

வினோத்திடம் இருந்து போலீசார் 2 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் அவரை உத்திரமேரூர் கோர்ட்டில் நீதிபதி இருதயராணி முன்னிலையில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story