மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை: பரமக்குடி கோர்ட்டில் மேலும் 3 பேர் சரண்
மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி கோர்ட்டில் மேலும் 3 பேர் சரணடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே இளமனூர் பகுதியில் கடந்த 2–ந்தேதி மணல் கொள்ளையை தடுக்க முயன்ற மோகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணல் குவாரி உரிமையாளர் மஞ்சலோடை ஆனந்தராஜ், பேராவூர் முனியசாமி, ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு ஹாரிஷ் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் ஜெயபாரத்(32), அருண்குமார்(25), அண்ணாநகர் ரெயில்வே குட்செட்தெரு கார்த்திக்(29) ஆகிய 3 பேரும் பரமக்குடி நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வழக்கில் கேணிக்கரை போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் கோர்ட்டில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.