பெருந்துறை பகுதியில் வாகன சோதனை: போக்குவரத்து விதிகளை மீறிய கிரேன்– கார் பறிமுதல்; 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அதிகாரி நடவடிக்கை
பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய கிரேன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 50 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
பெருந்துறை,
பெருந்துறை சுங்கச்சாவடி பகுதியில் பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி மற்றும் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கண்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் ஒன்றை தடுத்து நிறுத்தி அதன் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில், வாகன காப்பீடு இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் கிரேன் இயங்கி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கிரேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், வேறொருவருக்கு சொந்தமான காரை உரிய ஆவணங்கள் இன்றி வாடகைக்கு ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக கிரேன் மற்றும் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 24–ந்தேதி (நேற்று) வரை நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 50 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தற்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பெருந்துறை மற்றும் சீனாபுரம், திங்களு£ர், விஜயமங்கலம், காஞ்சிக்கோவில் ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.