போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை தாக்கி நகை, செல்போன்கள் பறிப்பு; ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வீடு புகுந்து தாக்கி நகை, செல்போன்களை பறித்து சென்றதுடன், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் அனீஸ்ராஜ்(வயது 21). இவர், சென்னை வளசரவாக்கம் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர், ராமாபுரம், சன்னதி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சகநண்பர்களுடன் தங்கி படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டுக்குள் ஆக்கி மட்டை, சுத்தியலுடன் அதிரடியாக புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், ‘‘நாங்கள் போலீஸ்’’ என்று கூறி வீட்டில் இருந்த மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 8 செல்போன்கள், 2 பவுன் சங்கிலி, ரூ.9 ஆயிரத்தை பறித்துவிட்டு, அவர்களில் ஒருவரது செல்போன் எண்ணையும் வாங்கி சென்று விட்டனர்.
நேற்று காலை மீண்டும் அவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போன் செய்து, ரூ.1 லட்சத்தை கொடுத்துவிட்டு உங்களது செல்போன்கள் மற்றும் நகையை வாங்கிச்செல்லும்படி கூறிவிட்டு செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டனர். அதன்பிறகுதான் மர்மநபர்கள் போலீஸ் போல் நடித்து தங்களிடம் நகை, செல்போனை பறித்து சென்றது மாணவர்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து ராயலா நகர் போலீசில் கல்லூரி மாணவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் மர்மநபர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் முன்விரோதம் காரணமாக யாராவது வேண்டுமென்றே போலீஸ் போல் நடித்து கல்லூரி மாணவர்களை தாக்கி, நகை, செல்போனை பறித்துச்சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.