ஆக்கிரமிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்: அறநிலையத்துறை கமி‌ஷனர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


ஆக்கிரமிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்: அறநிலையத்துறை கமி‌ஷனர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2019 10:30 PM GMT (Updated: 16 July 2019 9:12 PM GMT)

ஆக்கிரமிப்பு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடையே திரிவேணி சங்கமம் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இங்கு பலர் அனுமதியின்றி கடைகள் நடத்தி வருகின்றனர். மேலும் பலர் அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதேபோல மேலும் பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமி‌ஷனர்கள் அடங்கிய குழுவை ஐகோர்ட்டு நியமித்தது. அதன்படி வக்கீல் கமி‌ஷனர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “கன்னியாகுமரியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்து வக்கீல் கமி‌ஷனர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இருந்தபோதும் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை“ என வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர், சுசீந்திரம் இணை கமி‌ஷனர், பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6–ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story