பழனி பஞ்சாமிர்த ஆலைக்கு உரிமம் பெற வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பழனி பஞ்சாமிர்த ஆலைக்கு உரிமம் பெற வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 July 2019 3:30 AM IST (Updated: 18 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் ஆலைக்கு உரிமம் பெற வேண்டும் என்ற நோட்டீசுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

மதுரை,

பழனி தண்டாயுதபாணி கோவில் இணை கமி‌ஷனர் செல்வராஜ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலும் ஒன்றாகும். இங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படும். இதில் வாழைப்பழம், ஜாங்கிரி, தேன், ஏலக்காய், நெய் போன்றவைகளை கலந்து ரசாயனம் சேர்க்காமல் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தம் மைசூரில் உள்ள மத்திய உணவு தொழிநுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படுகிறது. இதற்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த மே மாதம் 23–ந் தேதி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ‘‘பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் செயல்படும் பழனி மலை அடிவாரம் மேற்கு கிரிவீதியில் உள்ள பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் தொழிற்சாலையை இயக்குவது கண்டறியப்பட்டால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டு இருந்தது.

பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு வினியோகிப்பதன் மூலம் தண்டாயுதபாணி கோவிலுக்கு எந்த லாபமும் கிடையாது. பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் குறைந்த விலையிலேயே வழங்கப்படுகிறது. எனவே உரிமம் பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்திற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த மாதம் 19–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story