உத்தமபாளையம் அருகே கோம்பையில் 2 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை; லேப்டாப், ஹார்டு டிஸ்க் பறிமுதல்
உத்தமபாளையம் அருகே கோம்பையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் 2 வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்,
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) போலீசார் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்த்தல் மற்றும் பணம் சேகரித்தல் உள்ளிட்ட புகார்களில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த முகமதுகனி என்பவரின் மகன்கள் மீரான்கனி(வயது31), முகமதுஅப்சல்(28) ஆகியோரும் அடங்குவார்கள். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீரான்கனி மற்றும் அவரது தம்பி முகமதுஅப்சல் ஆகியோர் முன்பு துபாயில் பணியாற்றி வந்தனர். அப்போது அவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது தங்கை பாத்திமா மற்றும் அம்மா நதிரா ஆகியோர் கோம்பையில் வசித்து வருகிறார்கள். எனவே கோம்பையில் உள்ள மீரான்கனி மற்றும் முகமதுஅப்சல் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்த கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமை போலீஸ் துணைசூப்பிரண்டு சீனிவாசராவ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை தேனிக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ், மற்றும் போலீஸ்சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை போலீசார் கோம்பைக்கு வந்தனர். இவர்களுடன் வருவாய்த்துறை சார்பில் துணை தாசில்தார்கள் கண்ணன், குமார் ஆகியோர் கொண்ட குழுவினரும் சென்றனர். அவர்கள் அங்குள்ளவர்களிடம் மீரான்கனி, முகமதுஅப்சல் வீடுகளில் சோதனை நடத்த வந்துள்ளோம் என்று கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான ஒரே கட்டிடத்தில் உள்ள 2 வீடுகளில் சோதனை நடந்தது. சோதனை அனைத்தும் வீடியோ மூலம் பதிவிடப்பட்டது. சோதனை நடந்த வீடுகள் அருகே தெருவில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அறைகள், பீரோக்கள், அலமாரிகள், போன்றவை சோதனையிடப்பட்டன. இதில் ஒரு லேப்டாப், ஒரு ஹார்டு டிஸ்க், 2 ஏ.டி.எம்.கார்டுகள், வங்கி பாஸ்புக் உள்ளிட்டவையும், தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் லெட்டர்பேடும் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை முடிந்து வெளியே வந்த என்.ஐ.ஏ. போலீசாரிடம், சோதனை குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். காலை 6 மணிக்கு சென்ற என்.ஐ.ஏ. போலீசார் மதியம் 12.30 மணிக்கு வெளியே வந்தனர். சோதனையின் போது வீடு அருகே 20–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.