திருப்பூரில் தையல் தொழிலாளி கொலை; கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்


திருப்பூரில் தையல் தொழிலாளி கொலை; கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 31 July 2019 5:00 AM IST (Updated: 31 July 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தையல் தொழிலாளி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய ஆசாமியை தேடி வருகிறார்கள்.

நல்லூர்,

புதுச்சேரி மெத்தப்பாக்கம் மேட்டுத்தெரு 2–வது வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 48). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கலியமூர்த்தி, தனது மகள் மற்றும் மகனுடன் திருப்பூர் விஜயாபுரம் மகாலட்சுமிநகர் 2–வது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கலிய மூர்த்தி மது குடிக்கும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கலியமூர்த்தி முத்தணம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் முத்தணமம்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள மரத்தடியில் கலியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. காது வழியேயும் ரத்தம் வெளியேறி இருந்தது. இதனால் அவர் உடல் கிடந்த பகுதியில் ரத்தம் உறைந்து கிடந்தது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் நவீன்குமார், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், கலியமூர்த்தி உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் பாருக்கு கலியமூர்த்தி சென்றபோது ஏற்பட்ட தகராறில் மர்ம ஆசாமி அவரை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று அங்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கூர்மையான ஆயுத்தத்தால் தாக்கி கொலை செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். மேலும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை பிடித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story