ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம்: மதுரை ஐகோர்ட்டு அளித்த ஒரு மணி நேர கெடுவுக்குள் சார்–பதிவாளர் இடைநீக்கம் - பதிவுத்துறை ஐ.ஜி. நடவடிக்கை


ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம்: மதுரை ஐகோர்ட்டு அளித்த ஒரு மணி நேர கெடுவுக்குள் சார்–பதிவாளர் இடைநீக்கம் - பதிவுத்துறை ஐ.ஜி. நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சார்–பதிவாளர் மீது மதுரை ஐகோர்ட்டு அளித்த ஒரு மணி நேர கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சார்–பதிவாளரை, பதிவுத்துறை ஐ.ஜி. பணி இடைநீக்கம் செய்தார்.

மதுரை,

புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஏனாபட்டி கிராமத்திலுள்ள நிலம் எங்கள் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதை திருமயம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். பதிவு ஆவணங்களை திருப்பிக்கேட்டபோது கள ஆய்வு செய்த பின்னர்தான் வழங்கப்படும் என தெரிவித்தனர். தானமாக பெறப்பட்ட நிலத்திற்கு கள ஆய்வு தேவையில்லை என கூறினோம். ஆனால், சார்–பதிவாளர் அலுவலகத்தில் ஏற்க மறுத்துவிட்டனர். அதே நேரம் களஆய்விற்கு வராமல் தாமதப்படுத்தினர்.

லஞ்சம் கொடுத்தால் கள ஆய்விற்கு வருவதாக தெரிவித்தனர். கள ஆய்விற்கு பிறகு ரூ.3 லட்சம் பணம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு சம்பந்தமான ஆவணங்களை திருப்பித்தர முடியும் என கூறினர். ஆவணங்களை திருப்பித்தர சார்–பதிவாளர் பணம் கேட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை டி.ஐ.ஜி. என பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பதிவு ஆவணங்களை திருப்பித்தரவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தேன். அவர்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், திருமயம் சார்–பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புகார் குறித்து மேல் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் பதிவுத்துறை தலைவரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார் என்றும், அவர் சம்பந்தப்பட்ட புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான சார்–பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று பதிவுத்துறை தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து திருமயம் சார்–பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.

பின்னர் இந்த நடவடிக்கை குறித்து கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சார்–பதிவாளர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கைக்கு அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற 6–ந்தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story