முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: மதுரையில் வசித்த தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் திடீர் மாயம்


முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு: மதுரையில் வசித்த தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் திடீர் மாயம்
x
தினத்தந்தி 31 July 2019 12:15 AM GMT (Updated: 31 July 2019 12:12 AM GMT)

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கு விசாரணைக்கு பயந்து மதுரையில் தங்கியிருந்த தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் மாயமானார். மேலும் அவர் உடல்நிலை பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை,

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் மாரி ஆகியோர், பாளையங்கோட்டையில் உள்ள உமாமகேசுவரியின் வீட்டில் கடந்த 23–ந் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படுகொலைகள் தொடர்பாக நெல்லையை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தது இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. சீனியம்மாள் மதுரை கூடல்புதூரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில் சமீப காலமாக வசித்து வந்தார்.

உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலைக்கும், தன்னுடைய குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் விவகாரத்தில் உமாமசுவரியுடன் எந்த மோதலும் இல்லை எனவும் அவர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் கூடல்புதூர் வீட்டில் இருந்து சீனியம்மாள் மற்றும் அவருடைய மகள் நேற்று திடீரென்று மாயமாகினர். அவர்கள் வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து சீனியம்மாளின் கணவர் சன்னாசியிடம் போனில் கேட்ட போது, ‘‘சீனியம்மாளுக்கு திடீரென்று மதிய நேரத்தில் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சர்க்கரை நோயும் உள்ளதால் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். நான் மதுரையில் இல்லாததால் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னையும், தனது குடும்பத்தினரிடமும் விசாரிக்க வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்த காரணத்தினால் விசாரணைக்கு பயந்து சீனியம்மாள், தனது குடும்பத்தினருடன் மாயமாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, ‘‘போலீசாரின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது. கண்டிப்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள். அதன் பின்னர்தான் மேயர் உமாமகேசுவரி கொலையில் யார்–யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது முழுமையாக தெரியவரும். மேலும் உமாமகேசுவரி கொலை செய்யப்பட்ட சற்று நேரத்தில் கார்த்திகேயன், தன்னுடைய தாயார் சீனியம்மாளிடம் போனில் பேசியதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற உள்ளது’’ என்று கூறினர்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக சீனியம்மாள் ஆஸ்பத்திரியில் சேர்ந்தாரா அல்லது தலைமறைவாகிவிட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இது மதுரையில் தி.மு.க.வினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story