ஆண்டிப்பட்டி அருகே, வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்திய கணவர் கைது - மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னவீரப்பன் மகன் ஈஸ்வரன்(வயது28). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஈஸ்வரி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஈஸ்வரி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஈஸ்வரியின் நோய் குறைபாட்டை குறிப்பிட்டு ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். கடந்த மாதம் 22–ந்தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஈஸ்வரன், ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து, தகாதவார்த்தையால் திட்டி, ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈஸ்வரி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, சப்–இன்ஸ்பெக்டர் ரதிதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வரதட்சணை கேட்டு ஈஸ்வரியை கொடுமைபடுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மாமனார் சின்னவீரப்பன், மாமியார் லிங்கம்மாள் மற்றும் ஈஸ்வரனின் உறவினர்கள் வேலம்மாள், இசக்கியம்மாள் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story