புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 3:51 PM GMT)

புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் பகுதியில் நரிக்குறவர் களுக்கு புதுக்காலனி மற்றும் பழையகாலனி என 2 குடி யிருப்புகள் உள்ளது. இந்த காலனிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆத்மநாதன் என்பவருடைய வீடு மேற் பகுதி முழுவதும் இடிந்து விழுந்ததில் சிவா, ராவுத்தர் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த பகுதிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்டித்தரக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் நேற்று அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன், அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், தாசில்தார் சூரிய பிரபு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நரிக்குறவர் காலனிகளை பார்வையிட்டு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய வீடு கட்டித்தர 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அறந்தாங்கி-பட்டுகோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story