ஜிப்மர் வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


ஜிப்மர் வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 8:00 PM GMT)

ஜிப்மர் வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி, 

ஜிப்மர் இயக்குனருக்கு மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசில் பல ஆண்டுகளாக புதிய நியமனம் என்பதே இல்லை. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அரிதாகிவிட்டது. அதனால் வேலைவாய்ப்பில்லாத படித்த இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தநிலையில் ஜிப்மரில் ஊழியர்கள் நியமனம் நடக்க உள்ள அறிவிப்பு மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு பதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் நிரப்பப்பட உள்ள பணியிடங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவு நர்சிங் உள்ளிட்ட இடங்களை பிடித்துள்ளனர். இது புதுச்சேரி இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜிப்மர் நிர்வாகம் சமூக பொறுப்பை உணர்ந்து புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 80 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுச்சேரி இளைஞர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின்னரே காலி பணியிடங்களை நிரப்ப ஜிப்மர் நிர்வாகம் முன்வர வேண்டும்.

இல்லையெனில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டும், கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளாகும் வேலைவாய்ப்பு இல்லாத புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து பங்கேற்கும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story