திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை


திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை
x
தினத்தந்தி 11 May 2020 4:45 AM IST (Updated: 11 May 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்தூர், 

முத்தூரில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள பெருமாள்புதூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவர் முத்தூர்-கொடுமுடி சாலையில் மலையத்தாபாளையம் ஓடை அருகில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (33). இவர் தனது கணவரின் லேத் பட்டறைக்கு முன்புறம் அழகு நிலையமும், தையல் கடையும் வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர்.

முத்தூர் ஹைஸ்கூல்மேட்டை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் விவேக் (28). இவர் கோவையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் விவேக்குக்கும், சங்கீதாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதுபற்றி இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரியவர அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி இருவரும் கடந்த மார்ச் மாதம் தங்களது குடும்பத்தை விட்டு விட்டு புதுச்சேரிக்கு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருப்பதை அறிந்து உடனடியாக அங்கு சென்றனர். அங்கிருந்த அவர்கள் இருவரையும் மீட்டு முத்தூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அதன்பின்பு இருதரப்பு வீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு இருவரும் பிரிந்து தங்களது சொந்த வீட்டிற்கு சென்று தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விவேக்கும், சங்கீதாவும் மீண்டும் சந்தித்து கொண்டனர். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். அப்போது விவேக், சங்கீதாவிடம் உனது கணவரை விட்டு பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் சங்கீதா விவேக்கை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கீதா தனது கணவர் யுவராஜ் மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இரவு 10.30 மணிக்கு வீட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு சங்கீதாவின் கணவர் யுவராஜ் யாரது? என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் வெளியே நின்று கொண்டிருந்த விவேக், யுவராஜ் முகத்தில் திடீரென்று ஒரு குத்து விட்டார். இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த யுவராஜ் அய்யோ! அம்மா! என்று அலறியடிபடி கீழே விழுந்தார். பின்னர் அவரை சரமாரியாக விவேக் தாக்கினார். யுவராஜின் மூக்கில் ரத்தம் வடிந்தது.

யுவராஜின் அலறல் சத்தம் கேட்டு சங்கீதாவும், மகளும் வெளியே ஓடி வந்தனர். உடனே சங்கீதாவின் மகளை மட்டும் வெளியே தள்ளி விட்டு சங்கீதாவை வீட்டிற்குள் வைத்து விவேக் கதவை பூட்டி கொண்டார்.

இதற்கிடையே வெளியே விழுந்த யுவராஜ் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் வீட்டு கதவை தட்டினார். திறக்கப்படவில்லை. பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு வீட்டுக்குள் ரத்த வாந்தி எடுத்து சங்கீதா இறந்த நிலையில் கிடந்தார். அருகில் விவேக்கும் மயங்கி கிடந்தார். சங்கீதா அருகே சிறுவன் அழுது கொண்டே இருந்தான். மனைவி இறந்ததை அறிந்து யுவராஜ் கதறி அழுதார்.

உடனே அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், விவேக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த சங்கீதாவின் உடலை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த விவேக்கை சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், யுவராஜை தாக்கி விட்டு வீட்டுக்குள் நுழைந்த விவேக், சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி இருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். உடனே தான் கொண்டு வந்த விஷ மாத்திரையை அவரது மகன் கண் முன் சங்கீதாவின் வாயில் திணித்து உள்ளார். அவர் தின்பதற்கு மறுத்து உள்ளார். உடனே சங்கீதாவின் கழுத்தை நெரித்து விஷ மாத்திரையை விழுங்க வைத்து உள்ளார். சிறிது நேரத்தில் சங்கீதாவின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து உள்ளது. அவர் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

பின்னர் காதலியே இறந்து விட்டாள். நாம் இருந்து என்ன பயன் என்று நினைத்த விவேக் தான் கொண்டு சென்ற விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதில் மயங்கி விழுந்த அவரை, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த பொதுமக்கள் அடித்து உதைத்து உள்ளனர். தற்போது அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிய வருகிறது.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் முத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story