போளூர், ஆரணியில் செவிலியர், 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா


போளூர், ஆரணியில் செவிலியர், 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2020 6:02 AM IST (Updated: 14 May 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

போளூர், ஆரணியில் செவிலியர், 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

போளூர், 

சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் போளூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் சென்னையில் இருந்து போளூருக்கு கடந்த 11-ந் தேதி வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை சுகாதார துறையினர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த பகுதியில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.

அதேபோல் போளூரை அடுத்த விளாங்குப்பம் பெரியேரியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரையும் சுகாதாரத் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளராக பணிபுரிபவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தினமும் பணிக்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூருக்கு சென்று வந்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் அவரது வீடு உள்ள பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருக்கும், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரியும் ஒருவருக்கும், கீழ்கொடுங்காலூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்தவாசி தெற்கு போலீஸ்நிலையம் மற்றும் வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் வந்தவாசி தீயணைப்பு துறையினரும், நகராட்சி தூய்மை பணியாளர்களும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தெற்கு போலீஸ்நிலையமும், நகர ஆரம்ப சுகாதார நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் தலைமை காவலருடன் பணியாற்றிய இன்ஸ்பெக்ட்ர், சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் என 25 பேரும், மருந்தாளுனருடன் பணியாற்றிய டாக்டர் உள்பட 5 பேரும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆரணியை அடுத்த தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கடந்த 8-ந் தேதி செய்யப்பட்டது. இதில் தேவிகாபுரத்தை அடுத்த மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணிற்கும், ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 25 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் 2 கர்ப்பிணிகளையும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் தொடர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெம்பாக்கம் தாலுகா வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னையில் லஞ்ச ஓழிப்பு துறையில் டிரைவராக பணியாற்றும் போலீசாருக்கும், மீசநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், செய்யாறு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றும் பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

சந்தவாசல் அருகே கேளூர் பெரியஏரி கொல்லமேட்டைச் சேர்ந்த 28 வயது வாலிபர் சென்னையில் இருந்து 8-ந் தேதி சொந்தஊருக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் பெரியஏரி கொல்லமேட்டில் வசிக்கும் வாலிபரின் பெற்றோரை தனிமைப்படுத்தி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story