கோவையில் இருந்து அசாம் சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியில் இருந்து 145 பேர் அனுப்பிவைப்பு


கோவையில் இருந்து அசாம் சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியில் இருந்து 145 பேர் அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 15 May 2020 5:09 AM IST (Updated: 15 May 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து அசாம் மாநிலம் சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து நேற்று 6-வது கட்டமாக 145 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

காட்பாடி, 

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதுபோல வேலைக் காக வந்திருந்த வடமாநில தொழிலாளர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூரில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கி இருந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வேலூரில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணி நடந்தது.

அதை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் கட்டமாக காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்த கட்டங்களாக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் 5 கட்டங்களாக சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 6-வது கட்டமாக நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த 145 பேரை அவர்களுடைய மாநிலத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.வேலூரில் பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் நேற்று மாலை அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக ரெயில் நிலையத்திற்குள் சென்றனர்.

அங்கு அவர்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து கோவையில் இருந்து அசாம் மாநிலம் செல்லும் சிறப்பு ரெயில் இரவு 9.20 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் 145 பேரும் ஏற்றப்பட்டனர். அதை தொடர்ந்து 9.30 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. அவர்களை வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ,காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story