ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் ஒடிசா செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம்
சேலத்திலிருந்து ஒடிசா சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காட்பாடி,
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளது. கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டதாலும், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் அவற்றில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி ஊருக்கும் திரும்ப முடியாமல் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. வேலூர் சி.எம்.சி.மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயங்க தொடங்கின.
அதன்படி வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 6-ந் தேதி முதல் காட்பாடியிலிருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் ஜார்க்கண்ட்,, பீகார் ,மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் 9-கட்டங்களாக அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒடிசா மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக சேலத்திலிருந்து காட்பாடி வழியாக நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
அந்த ரெயிலில் செல்ல 10-வது கட்டமாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலூரிலிருந்து 142 பேர், ராணிப்பேட்டையில் இருந்து 252 பேர், திருப்பத்தூரில் இருந்து 113 பேர் என மொத்தம் 507 பேர் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அரசு சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
ரெயில் வருவதை எதிர்பார்த்து அவர்கள் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த சிறப்பு ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு நேற்று மாலை 4 மணிக்கு வந்தது. அதில் ஒடிசா செல்லும் தொழிலாளர்கள் ஏறி அமர்ந்தனர்.
அவர்களை உதவி கலெக்டர்கள் கணேஷ் (வேலூர்), இளம்பகவத் (ராணிப்பேட்டை), காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ரெயில். நிலைய மேலாளர் ரவீந்திரநாத் ,காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story