திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 143 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 143 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 11:24 AM IST (Updated: 29 Jun 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 குழந்தைகள் உள்பட 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குறித்த பட்டியல் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச கட்டமாக 143 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு ஆரணியில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டாம்பூண்டியில் 27 பேரும், நாவல்பாக்கத்தில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 குழந்தைகள்

மேலும், தண்டராம்பட்டில் 10 பேரும், புதுப்பாளையம், கலசபாக்கம், பெருங்கட்டூர், மேற்கு ஆரணி பகுதிகளில் தலா 2 பேரும், செங்கத்தில் 3 பேரும், திருவண்ணாமலை நகராட்சியில் 10 பேரும், சேத்துப்பட்டு, ஆக்கூர், பொன்னூர், போளூர் தலா ஒருவரும், தச்சூரில் 7 பேரும், தெள்ளார் பகுதியில் 6 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 143 பேரில் 6 ஆண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகளும் அடங்கும்.

இவர்கள் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள், நெருங்கிய பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் 28 பேர் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள்.

1,762 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,762 உயர்ந்துள்ளது. இனி வருங்காலங்களில் தொற்று ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 More update

Next Story