கொள்ளை சம்பவங்களை தடுக்க விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார்


கொள்ளை சம்பவங்களை தடுக்க விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார்
x
தினத்தந்தி 28 Sept 2020 4:17 AM IST (Updated: 28 Sept 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 25-ந் தேதி அரியலூர் கடை வீதியில் உள்ள நகைக்கடையின் சுவரில் துளையிட்டு 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் செந்துறை கடைவீதியில் உள்ள நகைக்கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், அக்கம், பக்கத்தினர் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினர். இதனால் அந்த கடையில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பின.

ஆனால் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சம்பவ இடங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

விடிய, விடிய சோதனை

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கவும், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் டி.ஐ.ஜி. உத்தரவின்பேரில் கடந்த 2 நாட்களாக அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு, 2 துணை சூப்பிரண்டுகள், 14 இன்ஸ்பெக்டர்கள், 55 சப்-இன்ஸ்பெக்டர்கள், 333 போலீசார் இரவில் தொடங்கி விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிமெண்டு லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அவர்கள் நிறுத்தி, அவற்றில் தீவிரமாக சோதனை செய்கின்றனர்.

சந்தேகப்படும் படியாக வரும் நபர்களை பிடித்து விசாரிப்பதோடு, அவர்களுடைய கைரேகைகளையும் பதிவு செய்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story