பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி


பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 10 Oct 2020 10:37 PM GMT (Updated: 10 Oct 2020 10:37 PM GMT)

பெங்களூருவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்தது. ஆனால் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஆனால் கடலோர மாவட்டங்கள், வடகர்நாடக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வடகர்நாடகத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் பல கிராமங்களை சூழ்ந்தது. கடந்த சில தினங்களாக அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் அங்கும் மழை குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெங்களூருவில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நகரில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல நகரில் வெயில் வாட்டி வதைத்தது. இரவில் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே பெங்களூருவில் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டு இருந்தது. பின்னர் வெயில் வழக்கம்போல வாட்டி வதைத்து. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்தது. மல்லேசுவரம், சேஷாத்திபுரம், ராஜாஜிநகர், சதாசிவநகர், யஷ்வந்தபுரம், வசந்த்நகர், சிவாஜிநகர், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், ஹெப்பால், சிவானந்த சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும், விதான சவுதாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை, சிவானந்த சர்க்கிளில் உள்ள சுரங்க பாதை உள்ளிட்ட ஏராளமான சுரங்க பாதைகளை மழை, வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. நேற்று இரவு முழுவதும் மழை விடாமல் விடிய, விடிய கொட்டி தீர்த்தது. கனமழையால் பெங்களூரு நகர மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story