சேலம் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா: கோவையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்


சேலம் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா: கோவையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2021 9:38 AM IST (Updated: 24 Jan 2021 9:38 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி முதல் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, முகக்கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், பள்ளி வளாகம், வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறையினர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? எனவும், உடல் வெப்பநிலை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உடல் பரிசோதனை
பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதனை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் தென்பட்டால் அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்களுக்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில், கொரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். தற்போது வரை எந்த மாணவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கு அனுப்பும் முன் பெற்றோரும் தங்களது குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டு பள்ளிக்கு வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story