திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல்: அரசு ஊழியர்கள் 180 பேர் கைது


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல்: அரசு ஊழியர்கள் 180 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 4:12 AM IST (Updated: 5 Feb 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 180 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். மாவட்ட இணைச்செயலாளர் திலிப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் குறித்து அவர்கள் பேசி முடித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் அமர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

அதற்குள் அவர்களை மறியல் செய்ய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் போலீசாரின் தடுப்பையும் மீறி அரசு ஊழியர்கள் சாலையில் வந்து அமர்ந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே போலீசார் கயிறு கட்டி அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்துவது என்ற பெயரில் தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று கூறி சாலையில் சிலர் படுத்து மறியலில் ஈடுபட்டார்கள். சுமார் 30 நிமிடம் மறியல் போராட்டம் தொடர்ந்தது.

இந்த போராட்டம் காரணமாக பல்லடம் ரோட்டில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தில் ஏற்றி பெரிச்சிபாளைத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story