சென்னை விமான நிலையத்தில் அந்தமான் செல்ல வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா; பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை விமான நிலையத்தில், அந்தமான் செல்ல வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லூரி மாணவருக்கு கொரோனா
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று காலை விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கு டிக்கெட் கவுண்ட்டரில் கொரோனா சான்றுகளை ஆய்வு செய்து போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.
அப்போது அந்தமானைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மெடம்சாமி (வயது 21) என்பவர் அந்த விமானத்தில் செல்ல வந்தார். அவரிடம் இருந்த கொரோனா பரிசோதனை சான்றை ஆய்வு செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விமான நிலைய சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த மெடம்சாமி, தனது நண்பர்களுடன் தங்கி இருந்து உள்ளார். அப்போது அவருக்கு சளி தொல்லை இருந்ததால் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததும் அந்தமானுக்கு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மெடம்சாமியின் விமான பயணத்தை ரத்து செய்த சுகாதார துறை அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணி வந்ததால் டிக்கெட் மையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.